search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்ஏ பரிசோதனை"

    • போலீசார் கடந்த ஜனவரி 15-ந்தேதி போக்சோ சட்டத்தில் அன்புத் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • குழந்தையை கொன்ற சிறுமி மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் இருவரையும் மீன்சுட்டி போலீசார் கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செம்போடை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த உத்ராபதி மகன் அன்பு துரை (21) . இவரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆனார்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருமணம் செய்ய இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து போலீசார் கடந்த ஜனவரி 15-ந்தேதி போக்சோ சட்டத்தில் அன்புத் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்புத்துறை திருச்சி மத்திய சிறையில் உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அச்சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதனிடையே சிறுமி கர்ப்பமான வழக்கில் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதனைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் குழந்தை காணவில்லை என்று குழந்தையின் அம்மாவான சிறுமி மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வையில் குற்ற புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமி, தனது ஒரு மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பிடம் அருகே புதைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை செய்தார்.

    இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், ராமராஜன் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்பில் தாசில்தார் கலிலூர் ரஹ்மான் தலைமையில் விஏஓ காமராஜ் உட்பட வருவாய்த் துறையினர் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தையை கொன்ற சிறுமி மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் இருவரையும் மீன்சுட்டி போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கைதான சிறுமியின் தாய் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் மகள் திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமாக குழந்தை பெற்றது எனக்கு வேதனையை அளித்தது.

    இந்த விவகாரம் போலீஸ் நிலையம், கோர்ட்டு வரை சென்றது. கோர்ட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவிட்டதால் அதற்கு பயந்து குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டோம். மகள் வயிற்றில் பிறந்த குழந்தையை கொஞ்சி மகிழ வேண்டிய சூழலில் குழந்தையை கொன்று புதைத்துவிட்டோம்.

    இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க புதைத்த இடத்தில் வாசனை திரவியங்களை தெளித்தோம். பின்னர் குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடினோம். போலீசார் விசாரித்து எங்களை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஒரு மாத குழந்தையை தாயே கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • முதற்கட்டமாக சம்மன் அனுப்பி வராத 8 பேருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    • வேங்கைவயல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் விசாரித்த நிலையில் பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.

    123-வது நாளாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 153 சாட்சிகளை விசாரித்துள்ளனர். அதில் 7 போலீசாரும் அடங்குவர்.

    நேரடி சாட்சிகள் இந்த வழக்கில் இல்லாத நிலையில் அறிவியல் பூர்வமான சோதனையில் இறங்கிய போலீசார் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் 119 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து அதனைக்கொண்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி வேங்கைவயல், முத்துக்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த 11 பேருக்கு ரத்த மாதிரி எடுக்க சம்மன் அனுப்பப்பட்டது. அதில் 3 பேர் மட்டுமே ரத்த மாதிரியை அளித்தனர். 8 பேர் வரவில்லை. தங்களை குற்றவாளிகளாக்க மாற்றும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் மேலும் 10 பேருக்கு ரத்த மாதிரி எடுக்க திட்டமிட்டு, அதில் வேங்கைவயலை சேர்ந்த 2 பேர், இறையூர் கிராமத்தை சேர்ந்த 7 பேர் மற்றும் மேலமுத்துக்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் இன்று முதலில் 8 பேர் வருகை தந்தனர்.

    பின்னர் வேங்கைவயலை சேர்ந்த 2 பேர் தாமதமாக ரத்த மாதிரி அளிக்க முன்வந்தனர். அதேபோல் முதற்கட்டமாக சம்மன் அனுப்பி வராத 8 பேருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    அதேபோல் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு வேங்கைவயல் கிராமத்துக்கு வந்து களஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்தார். மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

    விரைவில் இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வேங்கைவயல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×